426. "வாத்தியார்" சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 5
டோண்டு தன் பதிவில் சொல்லாமல் விட்ட விஷயங்கள் இப்பதிவில் இருக்கலாம்.
இரங்கல் கூட்டம் குறித்த எனது முந்தைய பதிவுகளை வாசித்து விட்டுத் தொடரவும்.சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 1
சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 2
சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 3
சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 4
ஒளிப்பதிவாளர்/இயக்குனர் தங்கர்பச்சான் பேசியதை வைத்துப் பார்க்கும்போது, வாத்தியாருக்கு மிக நெருங்கினவராக தன்னை அவர் உணர்ந்து கொண்டதை புரிந்து கொள்ள முடிகிறது.
வாத்தியாரின் கதைகளில் (ஓர் எழுத்தாளனுக்குரிய) சமூக அக்கறையும், மெல்லிய கோபமும் வெளிப்பட்டது என்றும், தனது டிப்ளமா படிப்பின்போது வாத்தியாரின் "வந்தவன்" கதையை பிராஜெக்டுக்காக படமாக்கியது பற்றியும் தங்கர் பேசினார். ஆங்கில இலக்கியத்தை தமிழுக்கு இட்டு வந்ததில் வாத்தியாரின் பங்கு அதிகம் என்றும், அவர் தன்னை ஒரு மகன் போல் பாவித்தார் என்றும் தங்கர் நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.
தனக்கு கணினி அறிவு இல்லை என்று வாத்தியாரிடம் ஒரு முறை குறைபட்டுக் கொண்டபோது, அவர், "கம்ப்யூட்டர் தெரிஞ்சவன் எல்லாம் புத்திசாலியில்ல, தங்கர், இப்டியெல்லாம் யோசிக்காம உங்க வேலையப் பாருங்க, அதில் உங்க திறமையைக் காட்டுங்க!" என்று நம்பிக்கை ஊட்டியதை தங்கர் நினைவு கூர்ந்தார்.
முதியோர் இல்லத்தில் வசிக்கும் பெற்றோரை மையமாக வைத்து தான் எழுதிய கதையை வாத்தியாரிடம் சொன்னபோது, அவர் லேசாக அழுததை (ஒரே ஒரு தடவை!) தான் கண்டதாகவும், தான் போட்டுக் காட்டிய 'பாரதி' படத்தை பார்த்து விட்டு வாத்தியார் பாராட்டியதாகவும், பல எழுத்தாளர்களை உருவாக்கியதில் வாத்தியாரின் பெரும்பங்கை யாரும் மறுக்க முடியாது என்றும் தங்கர் பேசினார்.
தனது மனக்கஷ்டங்களின்போது, வாத்தியாரிடம் பேசி தான் ஆறுதல் அடைந்தது பற்றியும், வாத்தியாரின் நெற்றியில் விழும் அந்த கீற்று முடி அவரது மறக்க முடியாத அடையாளம் என்றும் தங்கர் கூறினார். வாத்தியாரின் விமர்சனம் தனது பல கதைகளுக்கு மெருகு கூட்டியது என்றும், கடைசியாக அவரை சந்தித்தபோது, தனது 'தாய் மண்' கதையை அவரிடம் சொன்னது குறித்தும் தங்கர் தெரிவித்தார்.
(அமெரிக்க சென்ற) பிள்ளைகளைப் பிரிந்து வாத்தியாரும், அவரது துணைவியாரும் தனியாக வாழ்ந்த விஷயத்தில், தான் புத்திசாலி என்று கருதும் அவர் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளவில்லை என்பதை வாத்தியாரிடமே நேரடியாகக் கூறியபோதும் கூட, அவர் ஒரு புன்னகையுடன், "தூரமா இருந்தாக் கூட, பாசம் இருக்கும், தங்கர்!" என்று துளியும் கோபமின்றி பதில் கூறியதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
கூட்டுக் குடும்பத்தையும், உறவுகளையும், கல்வி என்ற அசுரன் பிரித்துக் கொண்டிருப்பதாக தனக்கே உரிய பாணியில் சாடி, தங்கர் தன் பேச்சை நிறைவு செய்தார் !!!
எஸ்.ராமகிருஷ்ணன்:
சுஜாதாவை வாசகராகப் பார்த்த ஒரு தரப்பினரும், அவரை ஆதர்சமாகக் கொண்ட ஒரு தரப்பினரும் உள்ளனர். இது போல் ஒரு எழுத்தாளருக்கு அமைவது கடினம். வகுப்பறையில் கற்க முடியாத எதையும் கற்றுத் தரும் ஒரு "வாத்தியாராக" அவர் விளங்கினார்! கணையாழியின் கடைசிப் பக்கங்களில் சுஜாதா ஒரு முறை, "நல்ல வாசகர்கள் எழுத்தாளரை சந்திக்கவும் மாட்டார்கள், கடிதம் எழுதவும் மாட்டார்க்ள்" என்று கூறியிருக்கிறார் (எஸ்.ரா இப்படிப் பேசியது, வாய்ப்பிருந்தும் (தேசிகன் வாயிலாக) வாத்தியாரை நேரில் சந்தித்துப் பேச முடியாமல் போன எனக்கு மிக்க ஆறுதலாக இருந்தது!)
வாத்தியார் திறமையை இனம் காண்பதில் வல்லவர் என்பதை, அவர் பல வருடங்களுக்கு முன்பே கமலும், அருந்ததி ராயும் பெரிய அளவில் வருவார்கள் என்று தீர்க்கதரிசனத்துடன் சொன்னதை நினைவு கூர விரும்புகிறேன்.
'பூர்ணம் தியேட்டர்ஸ்' ரமேஷ், தான் பலப்பல விஷயங்களை வாத்தியாரிடம் பகிர்ந்து கொண்டிருப்பினும், அன்னியோன்யமாக நாம் உணர்ந்தவர்களிடம் நாம் பேசியது ஞாபகத்தில் இருப்பதில்லை என்றும், "பாரதி இருந்த வீடு" என்ற தங்கள் நாடகத்தைப் பார்த்து விட்டு வாத்தியார், "என்ன ரமேஷ், உங்க நாடகத்துல எல்லாரும் திகட்ட திகட்ட நல்லவங்களா இருக்காங்களே!" என்று கமெண்ட் அடித்ததையும் குறிப்பிட்டார். வாத்தியாரின் நகரம், வீடு, குதிரை போன்ற கதைகள் மறக்க முடியாதவை என்றும், அவரது 'ஸ்ரீரங்கத்துக் கதைகள்' ஒரு வகையில் 'சென்னை 28' திரைப்படத்திற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்றும் கூறினார்.
ஒரு தடவை வாத்தியாரிடம் சில கவிதைகளை இரண்டு மூன்று முறை வாசித்தாலும் புரிவதில்லை என்று தான் கூறியவுடன், 'புரியலேன்னா விட்ருங்க ரமேஷ்' என்று வாத்தியார் சீரியஸாகச் சொன்னாராம்! 'கவிதை என்பது உனக்கு அப்பாற்பட்டது' என்ற அர்த்தத்தில் தான் வாத்தியார் அப்படிச் சொல்கிறாரோ என்று சந்தேகப்பட்டு ரமேஷ் மறுபடியும், "ஏன் அப்டி சொல்றீங்க ?" என்று விடாப்பிடியாகக் கேட்டபோது வாத்தியார், "எனக்கும் கூட சில கவிதைகள் எத்தனை தடவை வாசிச்சாலும் புரியறதில்ல, ரமேஷ்" என்று ஒரு போடு போட்டதையும் நகைச்சுவையாக ரமேஷ் நினைவு கூர்ந்தார் !!! "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" என்ற கண்ணதாசனின் வரிகள் சுஜாதாவுக்கு பொருந்தும் என்றும் ரமேஷ் குறிப்பிட்டார்.
நண்பர் (ஓவியர்/பதிவர்) தேசிகன்:
வாத்தியாருடனான தன் முதல் சந்திப்பை நினைவு கூர்ந்த தேசிகன், அச்சமயம் தான் சுஜாதா சாரின் படம் ஒன்றை தன் கைப்பட வரைந்து, அதில் கையெழுத்து வாங்க அவரை அணுகியபோது, வாத்தியார், "அட, யார் இது ? என்னைப் போலவே இருக்கே!" என்று தனது usual ஸ்டைலில் கேட்டு விட்டு படத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்தாராம் ! அவரது பல கதைகளை வாத்தியார் தன்னுடன் டிஸ்கஸ் செய்தது பற்றியும், தனக்கு அவரது official biographer என்ற அந்தஸ்தை வாத்தியார் வழங்கியதையும், வாத்தியார் புதிய skoda கார் வாங்கியவுடன், அதில் சென்ற முதல் ரவுண்டில் தன்னையும் கூட்டிச் சென்றதையும் தேசிகன் மிக்க நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தனது திருமணப் பத்திரிகையைக் கொடுத்து அழைக்க வாத்தியார் வீட்டுக்குச் சென்றபோது, பத்திரிகையைப் பார்த்து விட்டு தேசிகனைப் பார்த்து, "உன் விதியும் அப்படியிருந்தால், நான் என்ன செய்ய முடியும் !" என்று வாத்தியார் கூறவே, அவர் அப்படிச் சொன்னதின் அர்த்தம் புரிய தேசிகனுக்கு சற்று நேரமானதாம் (தேசிகனின் மனைவி பெயரும் சுஜாதா :))
தேசிகன் அன்று பேசிய பிற விஷயங்கள் அவரது அப்போலோ தினங்கள் பதிவில் இருக்கின்றன.
திருமலை (சுஜாதா அவர்களின் சகோதரர்):அவர் தான் எனக்கு ரோல் மாடலாக விளங்கினார். ரேமண்ட்ஸ் விளம்பரத்தில் வரும் "The Complete man" என்பது அவருக்குப் பொருந்தும் ! நிறைந்த வாசிப்பனுபவம் மிக்கவராக இருந்தார். பல துறைகளிலும் தனது ஆளுமையை/திறமையை நிரூபித்தவர் அவர். அவர் ஒரு Original Thinker ! அவர் நன்றாக வரைவார், கிடார் வாசிப்பார், இசையில் ஞானமுள்ளவர் போன்ற விஷயங்கள் பலருக்கு தெரிந்திருக்காது. 120 ஆண்டுகளில் சாதிக்கத் தக்க விஷயங்களை என் அண்ணன் ஒரு 70 ஆண்டுகளிலேயே சாதித்து விட்டு போய் விட்டார் !!!! He was a Tall man, not just in terms of height but in stature too ! மற்றவரிடம் உள்ள நல்ல விஷயங்களுக்கே அவர் முக்கியத்துவம் கொடுப்பார். எங்கள் குடும்பத்தில் அவர் தான் இன்ஸ்பிரேஷனாகவும், மேற்கோள் காட்டத் தக்கவராகவும் இருந்தார்.
சுதாங்கன் (மூத்த பத்திரிகையாளர்):
எனது இயற்பெயரும் ரங்கராஜன் தான். ரா.கி.ர தான், சுஜாதாவுக்கு பெயர் சூட்டியது போல எனக்கும் இந்தப் பெயரை சூட்டினார். இந்த இரங்கல் கூட்டத்தை நானும், மதனும் கமலும் சேர்ந்து ஆர்கனைஸ் பண்ணியிருந்தால், அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்கப்பட்டிருக்கும் ! இக்கூட்டத்தை, பார்த்திபனும், வசந்தும், கனிமொழியும் சேர்ந்து நடத்தியது நல்லதாகப் போயிற்று, அவர்களுக்கு என் நன்றிகள்.
ரா.கி.ரங்கராஜனின் மனைவி ஏதோ ஒரு கதையை வாசித்து விட்டு, என்னிடம், 'எப்படி ஒரு மகாத்மா தான் இருக்க முடியுமோ அது போல ஒரு சுஜாதா தான்' என்று மனம் விட்டுப் பாராட்டினார்.
எ.அ.பாலா:
இந்த சமயத்தில் நான் கிளம்பத் தயாராகி விட்டதால், குறிப்பு எடுப்பதை நிறுத்தி விட்டேன். சுதாங்கனுக்குப் பிறகு பேசிய வாத்தியாரின் பெண் உறவினர் ஒருவரும், வாத்தியாரின் டாக்டரும் பேசியதில் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. அவ்விருவரும் வாசித்த (அஞ்சலிக்) கவிதைகளைக் கேட்க, நல்ல வேளை, வாத்தியார் உயிருடன் இல்லை !!!! இப்படி எழுதுவதற்கு வாத்தியார் என்னை மன்னிக்கவும் !
(இரங்கல் கூட்டத் தொகுப்பு நிறைவடைந்தது)
எ.அ.பாலா
9 மறுமொழிகள்:
Rest in peace, Sujatah Sir !
உங்களின் சிரத்தையான தொகுப்புக்கு மிக்க நன்றி.
சுஜாதா என்றால் எல்லோரும் அறிவர். நீங்கள் அப்படியே குறிப்பிட்டிருக்கலாம். வாத்தியார் என்று எல்லாப்பத்திகளிலும் வலியத் திணித்திருப்பதைப்போல் தெரிகிறது. உங்கள் அன்பு காரணமாக அப்படி எழுதியிருக்கலாம். யாரையோ பற்றி வாசிப்பது போல் உள்ளது. சுஜாதாவை அழித்து வாத்தியார் என்று நிறுவுவதைப்போல் உள்ளது. வாசிக்கும்போது தோன்றியதைச் சொன்னேன். தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.
இதைப் பிரசுரிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.
நன்று பாலா ஸார்.. நமது வாத்தியாரின் வாழ்க்கைக் குறிப்புகளில் குறிப்பிடத்தக்க ஆவணமாக இத்தொகுதி அமையும் என்பதில் எனக்கு ஐயமில்லை..
இத்திருமிகு சேவைக்காக தங்களை ஈடுபடுத்திக் கொண்டமைக்கு எனது நன்றிகள்..
நேரம் செலவிட்டு முழுமையாக சுஜாதாவின் நினைவுக்கூட்டத்தைப்
பதிந்தமைக்கு நன்றியும் பாராட்டும்.
சுஜாதாவின் 'செம்மொழி தமிழ்' (2005)
என்பதிவில் கொடுத்துள்ளேன். காண்க.
அன்புடன், நா. கணேசன்
http://nganesan.blogspot.com
விரிவான இடுகைகளுக்கு நன்றி,பாலா. முபாரக் சொன்னது எனக்கும் தோன்றியது.
முபாராக்,
மிக்க நன்றி. வாத்தியார் என்பதை நிறுவுவது என் எண்ணமில்லை. இருந்தும், வாசிப்பவர்க்கு அப்படித் தோன்றுவதற்கு வாய்ப்புள்ளது ! நீங்கள் சொன்னதில் தவறு ஒன்றும் இல்லை, நண்பரே !
உண்மைத் தமிழன்,
பாராட்டுக்கு நன்றி.
இரங்கல் கூட்டம் குறித்து விரிவாக எழுதியது, பின்னாளில் அது பயன்படக்கூடும் என்பதால் தான்.
கணேசன் சார்,
வாங்க, நன்றி.
தங்கள் "செம்மொழி தமிழ்" பதிவை வாசித்தேன். இட்டதற்கு நன்றி.
காசி,
வருகைக்கு நன்றி. உங்களுக்குக் கொஞ்சம் திகட்டியிருக்கலாம் என்பதை ஒப்புக் கொள்கிறேன் :)
எ.அ.பாலா
Dear Bala
Thanks a lot for compiling all the speeches on our beloved Sujatha. Some of them were very touching bringing about fond memories of a writer and a gentleman. Such heroes arrive once in a century. Wish he had lived longer and written more and more for all of us.
vijayasarathy, Havana, Cuba
அன்புக்குரிய பாலா,
ஓரிருமுறை இங்கு வந்துசென்றாலு, எல்லாப்பதிவையும் சேர்த்து இன்றுதான் வாசித்தேன். சுஜாதா சாருக்கு நீங்கள் செய்த சிறந்த அஞலியாகவே, உங்களுடைய இந்த தொகுப்பு அமைந்திருக்கிறது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாமல் போனமைக்கு விரிவாக அதை நிவர்த்தி செய்துள்ளீர்கள். மிக்க நன்றி.
விரிவாகச் சொல்லிவைத்தது நன்றாக இருக்கிறது பாலா.
அவரை ஒருமுறை சந்திக்க முடியாமல் போனது எனக்கும் வருத்தம்தான்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்.
Post a Comment